ஞாயிறு, 8 ஜூலை, 2012


" சொல்லப்படாத கதை .." நாவல் தொடர் :

          " சொல்லப்படாத  கதை .."     
                           நாவல் தொடர் :
                            அத்தியாயம் - 2
               அனீபா ஹாஜியார் கொஞ்சமல்ல நிறையவே  கறார் பேர்வழி. ஹாஜியாரானாலே முஹல்லாவுக்குள்  எல்லோருக்கும்    உதறல்தான். ஆள் தராதரமல்லாம் கிடையாது .யாராக இருந்தாலும் 'வெடுக்' பேச்சுதான். ஆரம்பம் தொட்டே அவரின் சுபாவம் இது .இந்த சுபாவம் அவருக்கு ' ஆள் ரொம்ப.. தைரியசாலியாக்கும் ..'  என்ற பெயரைக் கொடுத்திருந்தது . இதை ஒரு கூடுதல் கௌரவமாகவும் ,தன்  பெயருக்குப் பின்னே கொண்ட ஒரு பட்டமாகவும் பாவித்துக் கொண்டார் அனீபா ஹாஜியார் . இதை காரணமாகக் கொண்டே அவரிடம் கூடுதல் செருக்கும் ,கூடுதல் மிடுக்கும் ஏற்பட்டுப் போனது .இதற்கு ஏற்றாற் போலவே  நல்ல நெடு நெடுவென்ற  உயரம் . பள்ளி வீதியில் நடந்து போகும் போதெல்லாம் ,'அந்தக்காலத்துலே குஞ்ஞாலிகுட்டி   தங்களப் பாத்தாப்ல இருக்கு ...'என்றோ ,-  "ஹாஜியாருக்கிற வாப்பாவ  பாக்குறாப்லாயே  இருக்கு…. …..வலியாப் பா   நடந்து போனாருன்னா ...இப்படித்தானிருக்கும் ...அவுலியாக்களப் பாக்குறமாதிரி  கண் கொட்டாமப்  பாப்பாங்க  ஜனங்க ! ஒரு பெரிய தோல்ஷாப்பையும் , தோட்டத்தையும்  தனியாளா  காவல் காத்தவராக்குமே மனுஷன் ...." என்றெல்லாம்  முஹல்லா வாசிகளின்  பேச்சு காற்றில் பரவி ஹாஜியாருக்கு முன்பும் ,பின்புமாக பள்ளிவீதியில் உலாவரும் .ஹஜ்ஜுக்கு சென்று வந்த பிறகு தலையில் தொப்பியும் ,தோளில் வெள்ளை நிற துண்டுமாக ஆளின் தோரணை  மேலும் கூடிப்போனது  .ஹாஜியார்னாலே பயம் கலந்த ஒரு  மரியாதை  எல்லோருக்குள்ளும்  ஊடுருவியிருந்தது . முஹல்லாவில்  ஹஜ் யாத்திரை சென்று வந்த முதல் நபர் அனீபா ராவுத்தர்தான் .இப்போது நிறையப்பேர் ஹாஜியாராகியிருக்கிரார்கள் . ஆனாலும் 'ஹாஜியார்'  என்றால்  அனீபா ஹாஜியாரைத்தான்  குறிப்பதாக  இருக்கிறது  முஹல்லாவுக்குள். அனீபா ராவுத்தரின் பூர்வீகம் புதுக்கோட்டை . அவரின் முன்னோர்கள் பஞ்சம் பிழைக்க கோயம்புத்தூர் வந்ததாக வரலாறு. எல்லாப் பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து குடியேறியவர்கள்தான் இப்போது மண்ணின் மைந்தர்களாக பரவிக்கிடக்கிறார்கள் ."புதுக்கோட்டைக்காரங்க ...'என்று அழைக்கப் பட்டு நாளடைவில் அது 'புதுக்கட்ட ' என்ற குடும்பப் பெயராகிப் போனது. செங்கோட்டையிலிருந்து வந்தவர்கள் 'செங்கட்ட '. தென்காசிலிருந்து வந்தவர்கள் 'தென்கச்சி '. முத்துப்பேட்டை வம்சாவழி என்றால் 'முத்துப்பட்ட ' இப்படியாக தரவாட்டு -குடும்பப்பெயர்கள் முன்னோர்கள் செய்த வியாபாரத்தைக் காரணமாகக் கொண்டும் ஏற்பட்டிருக்கிறது .சட்டி ,பானை வியாபாரம் செய்தவர்களின் குடும்பப்பெயர் 'சட்டிக்குடும்பம் ' மாவு இடித்து விற்பனை செய்தவர்களின் குடும்பம் மாவிடிச்சான் '. 'எந்த' என்ற பெயரில் கூட ஒரு குடும்ப வகையறா இருக்கிறது .'எந்த இப்ராகீம்' என்றுதான் அந்த குடும்பத்தின் மூத்தவரின் பெயர் . இந்த 'எந்த ' என்பதின் பெயர் காரணம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒரு வேளை எந்தவித அடையாளமும் அவர்களின் அந்தக் குடும்பத்திற்கு இல்லாமல் இருந்திருந்திருக்கும் .அதனால் கூட "அது எந்தக் குடும்பம் ...? என்று கேட்கப்பட்டு ,நாளடைவில் அந்த குடும்பத்தின் பெயரே 'எந்த' என்றாகியிருக்கலாம் . அதே போலவே கொப்புளி' ,'பிச்சக்காரர்' ,'எரப்பாளி ' என்றெல்லாம் தரவாட்டுப்பெயர்கள் உள்ளன. இவையெல்லாம் பெரிய பெரிய தரவாடுகள் . ஆனாலும் இந்த குடும்ப வகையறா பெயர் காரணம் சரியாக யாருக்கும் தெரிந்திருக்கவில்லை .'மஜீத்' என்றால் ,' எந்த மஜீது ...?' என்று கேட்பார்கள் .'பிச்சக்கார மஜீது' என்றால் உடனே புரிந்து கொள்வார்கள் .இப்படியாகத்தான் தரவாட்டுப் பெயர் முஹல்லா தோறும் ,எல்லா ஜமாஅத்களிலும் தொடர்கிறது - மனிதர்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில். "பிச்சக்கார குடும்பம்னு சொல்றாங்களே ....! அப்ப இவங்க முன்னோர்கள் பிச்சைஎடுத்திட்டியிருந்தாங்களா ...?" அத்து முனா ஒரு முறை காஜா உசேனிடம் கேட்டதுக்கு அவன் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டான்.                                                               "ஏன்டா சிரிக்கிறே ...?    "யாருக்குத் தெரியும் ...?                                                                 "அதுகேண்டா ...சிரிக்கிறே ...தெரியலன்னு சொல்லேன் ..."                                                                             பல பேரிடம் அத்துமுனா கேட்டுவிட்டான் . யாருக்கும் தெரியவில்லை. ."பிச்சக்கார' குடும்பம்" இதற்கான பதில்  சிரிப்பாகவே இருந்தது. இந்தக் குடும்பம்தான் முஹல்லாவில் இருப்பதிலேயே சிறிய குடும்பம். நாளடைவில் இந்த குடும்பப் பெயர் இல்லாமலேயே போய்விடலாம் . இந்த தலைமுறையில் உள்ளவர்கள் இந்த குடும்பப் பெயரை மறக்க நினைக்கிறார்கள் .அவர்கள் தங்கள் இனிஷியலாக குடும்பப் பெயரின் 'பி' என்கிற முதல் எழுத்தை இப்போது அடையாளப்படுத்துவதில்லை .சில தரவாட்டுப்பெயர்களை இந்த தலைமுறை கேவலமாக நினைப்பதே அதற்கு காரணம் .'புதுகட்ட' குடும்பத்துக்காரனான முபாரக்கின் மூத்த மகன் எட்டாவதுதான் படிக்கிறான் . ஒரு சமயம் அவன் தன் பெத்தாவிடம் (தாத்தா) "பெத்தா ! எதுக்கு எனக்கு இரண்டு இனிஷியலு ...?" என்று கேட்க , அதற்கு அப்துல்காதர் ராவுத்தர் ,"  'எம்' உம்வாப்பாக்கிற பேரு .'பி'  வந்து நம் குடும்பப் பேரு ... அதாக்கும் ..." என்றார் சிரித்தவாறும் பேரனின் கேள்வியை வியந்தவாறும்.  பேரன் விடவில்லை ."குடும்பத்துக்கெல்லாம்  பேரிருக்கா...பெத்தா...? அப்ப நம்ம குடும்பப் பேரென்ன ...?" என்றான் .
" நம்ம குடும்பப்பேரு புதுக்கட்ட ..." என்றார் பெருமை பொங்க.                புதுக்கட்டயாவா…... அப்பிடினா ...?" பேரனின் முகத்தில் ஒருவித இகழ்ச்சி ஓடியதை அவர் கவனிக்க தவறவில்லை.
"எங்க பெத்தா காலத்துக்கும் முன்னால இருந்தவங்க புதுக்கோட்டயிலிருந்து  இங்க வந்தவங்க  நம்ம குடும்பத்த அடையாளப்படுத்த 'புதுக்கோட்டகாரங்கன்னு ' அப்ப சொல்லுவாங்க.அதான் இப்ப        'புதுக்கட்ட 'ன்னு ஆயிருக்கு சபீர் .
" பேரப்பாரு...புதுக்கட்ட  பழயகட்டனு....பேரே நல்லால்ல பெத்தா ...." பேரனின் இந்தக்கூற்று அப்துல் காதர் ராவுத்தரை திடுக்கிடச் செய்தது. இந்த தலைமுறை எதையும் அடையாளப்படுத்த விரும்பவில்லையோ ..இல்ல எதிர்க்க ....கேள்வி கேட்க விரும்புதோ....? அவருக்குள் இப்படியாக சிந்தனை ஓடியது.   எங்க காலத்தில் நாங்க இப்படியெல்லாம் கேள்வி கேட்டதேயில்லை ... இப்படியான நெனப்பே ...தோணாது மொதல்ல. அப்பறம் எங்க கேள்வி கேட்குறது .....                                                               அவர் சிந்தனையைக் கலைத்தான் பேரன் சபீர் ."குடும்பப் பேரு எதுக்கு ....பெத்தா ....? குடும்பப்பேர  எல்லமா   இனிஷியலா…...வப்பாங்க ...?                                இந்தக் கேள்வியை அவர் அதிர் கொள்ளவில்லை .சட்டென பேரன் இப்படிக் கேட்டதும் ,கொஞ்சம் மிரண்டுதான் போனார். யோசிப்பதாக பாவனை செய்தால் , 'இதுக்கெல்லாம் யோசிக்கிரியே பெத்தா ...'ன்னு  அடுத்தக் கேள்வி வந்தாலும் வரும் .லேசாக சிரிப்பைக் காட்டிய அப்துல்காதர் அவனை தன் பக்கம் மெல்ல இழுத்து பக்கத்தில் உட்கார வைத்தார் .சபீர் ,பெத்தாவை கூர்ந்து பார்த்துக்கொண்டே அவர் பக்கத்தில் உட்காந்தான் .பதில் சொல்லத் தெரியலையா ...உனக்கு ....? 'என்பதாக இருந்ததை உணர்ந்தார் ராவுத்தர் . "நமக்கான -நம்ம குடும்பத்துக்கான ஒரு  அடையாளமாக்கும் குடும்பப்பேரு.  ஒவ்வொருத்தரும் குடும்பப் பேர வச்சுத்தாண்டா அந்தக்காலத்துல இன்னாருன்னு அடையாளப்படுத்துனாங்க .உம்வாப்பாவச் சொன்னா ...என்னத்தெறியும் .....உடனே 'புதுக்கட்டயா ...?' னு குடும்பத்த தெரிஞ்சுக்குவாங்க .ஆனா ...உன்னச்சொன்னாலோ ... உம்பேரச்சொன்னாலோ ...நம்ம குடும்பத்துலயே யாருக்கும் தெரியாது .அப்துல்காதர் ராவுத்தரோட பேரனாக்கும்னா ...சட்டுனு தெரிஞ்சுக்குவாங்க .அப்பவும் எந்த அப்துல்காதர் ராவுத்தர்னு .... கேள்வி வரலாம் .புதுகட்டனு சொன்னா ... ...னு  நம்மதரவாட்ட .தெரிஞ்சுக்குவாங்க .அதுக்குத்தா இந்தக் குடும்பப் பேரு .இப்பப் புரிஞ்சுதா ...எதுக்கு குடும்பப் பேருங்குறத ...?" என்றவாறு பேரனின் தலையை வாஞ்சையுடன் தடவினார் ராவுத்தர் .                                             "குடும்பப் பேரத் தெரிஞ்சு என்ன பண்ணப் போறாங்க .....பெத்தா ....?" என்று கேட்டுவிட்டு பெத்தாவின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் சபீர் அவன் பாட்டுக்கு எழுந்து போனான் .வியப்பும் ,கொஞ்சம் அதிர்ச்சியுமாக இன்றைய இளைய தலைமுறையின் போக்கை எண்ணிக்கொண்டு பேரன் கண்ணிலிருந்து மறையும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் ராவுத்தர் பெருமூச்சு விட்டவாறு. அன்று முழுக்க பேரனின் கேள்வி அவருக்குள் அலைந்தபடியே இருந்தது. குடும்ப அடையாளம் பற்றியெல்லாம் சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் இந்த வயசிலேயே தோணும் இன்றைய குழந்தைகளைக் குறித்து வியப்பு ஏற்பட்டாலும் புரியாத வயசு கேள்வியாகவும்  ஒரு எண்ணம் தோன்றியது. தன் மனைவியிடமும்  இது பற்றிப்பேசி  தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
" நம்ம சபீராக்கும்  இப்படியெல்லா கேட்டது .....ம்...ம்..." மைமூன்பீபியின்  முகம் ஆச்சிரியத்தில் விரிந்தது.
"என்னளா..! என்ன சொல்லிட்டேன்னு  இப்பிடிக்கெடந்து பூரிக்கிறே....? பேரன் இப்பிடி எகத்தாளமா கேக்குறானேன்னு  உங்கிட்ட சங்கடமா சொன்னா...நீயி கெடந்து  ..சந்தோசப்படுறே....?" கோபம் பொங்கக்கேட்டார் ராவுத்தர்.   
"ஆமா...நீங்களும் ஒங்க குடும்பமும். அப்பிடியென்ன  ஒங்க  குடும்பத்             தப்பத்தி  சபீர் தப்பாப் பேசிட்டான்னு இப்பிடி கோவப்படுறீங்க....ம்..? " மைமூன் பீபி வெடுக்கென கேட்க,  "ஒனக்கு மயிரளா தெரியும் ..."     கோபமா  கத்திவிட்டு வெளியேறிப் போனார் ராவுத்தர்.   'இப்ப எதுக்கு தேவைல்லாம இந்த மனுஷன் இப்படிக் கோவப்படுராரு ......'முசுக்குனு தேவைல்லாம கோபப்படும் கணவனின் குணம் தெரிந்துதான் என்றாலும்  'இந்த ஒண்ணுமில்லாத  சின்ன விசியத்துக்குப் போயி இப்படி கோவப்படனுமாக்கும் ...பேரன் இப்படிக் கேட்கிறானேன்னு  மனுஷன் சந்தோசப்பட வேண்டுமாக்கும் .....அப்படி என்ன கேட்டுட்டா ....சபீர் ...நல்ல மனுஷன்….....முணு முணுத்துக்கொண்டே அடுப்படி வேலைகளை கவனித்தாள் மைமூன் பீபி.                                                                                                                    
               குருவையா நாயுடு தோல்ஷாப்   மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய நிறுவனமாகத் திகழ்ந்தது  அந்தப்பகுதியில்.  ஊரின் மேற்குப் பகுதியில் காளவாய்  செல்லும் வழியில் இடதுபுறம் கம்பி வேலியும்    மதில் சுவருமாக  ஏக்கரா கணக்கில் இடம் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும். அன்றைய காலகட்டத்தில்  ஆத்துப்பாலம் ,குறிச்சி ,களவாய்  போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு  வேலை வாய்ப்பும், வாழ்வாதாரமும்  வழங்கி வந்த  ஒரு பெரிய நிறுவனம் இது. அதில் முக்கிய பொறுப்பாளராக  உத்தியோகம் பார்த்தவர் புதுக்கட்ட  தரவாட்டின்  முன்னோரான  அஹமது ராவுத்தர்.அதன் பிறகு அவரின் வாரிசான முகம்மது உசேன் ராவுத்தர். இப்போது  அனீபா ராவுத்தர்.     முகம்மது  உசேன்  ராவுத்தர்  குருவையா நாய்டு தோல்ஷாப்பின் பிரதான காவல் காரராக இருந்தார். அவரின் தைரியமும், திடகாத்திரமான உறுதிமிக்க உடலமைப்புமே    அவருக்கு இந்த பொறுப்பை  தேடிவரச்செய்தது. அப்போது தோல்ஷாப்பிலிருந்தும், உள்ளே இருந்த தோப்பிலிருந்தும்  அடிக்கடி திருட்டு  போய்க் கொண்டிருந்தது. ஏற்கனவே இருந்த காவல்காரன் அவர்களுக்கு உள்ளாளாக  இருந்தான். ராவுத்தரிடம் அந்த பொறுப்பு கொடுக்கப்பட்ட அந்த இரவே மூன்று பேர் கையும் களவுமாக பிடிபட்டனர். தொழிற்சாலை முழுக்க மட்டுமல்ல ஊருக்குள்ளேயும் ராவுத்தரின் தைரியம் பெரிதாக பேசப்பட்டு  போற்றப்பட்டது. முகம்மது உசேன் ராவுத்தருக்கு அப்போது  வயது அறுபது. ஆறடிக்கும் மேலான உயரத்தில் வாட்டசாட்டமான உடம்பு .மீசையை முறுக்கி விட்டாரென்றால் அவர் முகத்துக்கு மேலும் கம்பீரம் வந்துவிடும்.அப்போது  அவர் முகத்தை எதிர் கொள்ளவே  பயம் ஏற்படும். ஆனால் ராவுத்தர் எப்போதும் மீசையை மேல் நோக்கி முறுக்கி விட்டுக்கொண்டது கிடையாது. இஸ்லாத்துக்கு எப்போதும் கட்டுப்பட்டே நடப்பார். இஸ்லாம் வலியுறுத்தும் ஹலால் ,ஹராம் விஷயங்களில் கண்டிப்பானவராக இருந்து  வந்தார். அத்துமுனாவின்  வாப்பா சிறு வயதில் அவரோட மீசையை மேலே தூக்கி முறுக்கி விட்டு வாப்பாவின் கம்பீரத்தைமுரட்டு தோற்றத்தை  அடிக்கடி ரசிப்பதாக  சொல்லி கேள்விப்பட்டிருக்கிறான் அத்துமுனா. அது மட்டுமல்ல , பெத்தா காவல் காத்த காலத்தில் நடந்த நிறைய     நிகழ்வுகளையும்    கதை கதையாக அவனுக்கு சொல்லியிருக்கிறார்கள்  அனீபா பெரியப்பாவும்  ,அன்சாரி சின்னப்பாவும். வீர தீரம் நிறைந்த கதைகள் அவை. அத்துமுனா அவன்  பெத்தாப்பாவை பார்த்ததில்லை. அவன் பிறக்கும் முன்பே உசேன் ராவுத்தர் காலமாகி விட்டார்.
       தோல்ஷாப்புக்குள்  ஒரு பகுதி முழுக்க   தென்னை, மா, வாழை, கரும்பு என தோப்பு விளைந்து கிடக்கும்.  அந்த தோல்ஷாப்பிற்கு ஒத்தை ஆள் காவல் என்பதை நம்ப முடியாது . ஆனாலும் நிர்வாகம் முகம்மது  உசேன் ராவுத்தரை நம்பியது. காரணம் அவரது துணிச்சல் . தனியாளாக இரவு முழுக்க தோப்புக்கள் 'டார்ச்லைட் ' அடித்துக்கொண்டு சுற்றிக்கொண்டே இருப்பார் ராவுத்தர்.                                                            
         கொஞ்சம்  அசதியில் கயிற்றுக் கட்டிலில் உடலை கிடத்தியிருந்தார் அன்று. மின்னி மின்னி எரியும் நட்சத்திரங்களில் லயித்துக்கிடந்தது மனம். வல்ல இறைவனின் படைப்புகளை எண்ணி வியந்தவாறு. கரிய இருட்டில் நீண்டு கிடந்தது தோப்பு .கிழக்குப்பக்கமிருந்து எதோ சலசலப்பு எழுந்ததை உணர்ந்தார் ராவுத்தர் .  காதுகளை கூர் தீட்டிக் கொண்டு ,வெடுக்கென்று எழுந்து உட்காந்தார் .ராவுத்தரின் காவலுக்கு பயப்படாதவர்கள் சுற்றுவட்டாரத்தில் இந்தப்பக்கம் யாரும் இல்லை .அப்படி என்றால் இது வெளி ஆளாகத்தான் இருக்க வேண்டும். தலைமாட்டில் இருந்த கத்தியை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டார் . சத்தம் வந்த திசையை நோக்கி பார்வையைச் செலுத்தினார் .டார்ச் ஒளியின் நீளம் வரைக்கும் .கொஞ்ச நேரம் எந்த அசைவும் இல்லை . தோப்புக்குள்ளும் ,வெளியிலுமாக நாய்களின் குரைப்பொலி வேறு அகாலத்தை மேலும் பீதிக்குள்ளாக்கிக்  கொண்டிருந்தது . மெல்ல எழுந்தார் ராவுத்தர் . தொழிற்சாலையிலிருந்து இரவு ஷிப்டின் இயந்திரங்களின் இரைச்சல் மேலும் அமைதியைக் கிழித்துக்கொண்டிருந்தது . தொழிற்சாலையை   நோக்கிச் செல்லும் பாதையின் இரு மருங்கிலும் கரும்புக்காடு நன்கு வளர்ந்து செழித்திருந்தது. .'டக் ..டக் ..டக் .....'கென்ற ஒலி  ராவுத்தரை திடுக்கிட வைத்தது .இதென்ன சத்தம் .......கொஞ்ச நேரம் அமைதி . மறுபடியும் அதே சத்தம் ! மெல்ல அடியெடுத்து வைக்கும் குதிரையின் குளம்பொலி சத்தம் ! ராவுத்தரின் உடல் ஒரு கனம் அதிர்ந்து நின்றது .இங்கே குதிரையின்  குளம்பொலிச் சத்தம் எப்படி ....? குதிரையில் வரும் கள்வன் .....இங்கு யார் ....?    வேறு என்ன சத்தமாக இருக்கும் .ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதை உள்ளுணர்வு உறுத்தியது .'கீய்ங்...கீய்ங்....'கத்தியை தீட்டும் அல்லது உரசும் சத்தம் அவரை திடுக்கிடச்செய்தது. 'கருக் 'கென்று அவருக்குள் ஒரு உதறல் .கட...கட...வென குதிரை அவரை கலந்து போவதைப் போல உணர்ந்தார் . இப்போது சத்தம் வேறு பக்கமிருந்து கேட்டது . 'இந்த நேரம் பாத்து அவனுங்க ரெண்டு பேரு எங்க போய்த்  தொலஞ்சானுங்க ...... டே ...! இவனே ...!' ராவுத்தரின் சத்தம் வெளியே வரவில்லை . தொண்டைக்குள்ளயே அமிழ்ந்து போனது ...'ம்கும்'......ஒரு கணை கணைத்துக்கொண்டார் . கிழக்கு மூலையிலிருந்து 'பளிச்சென்று 'ஒரு மின்னல் கீற்று ஒளிர்ந்து மறைந்தது .ராவுத்தரின் கை அவரை அறியாமலேயே இடுப்புக் கத்திக்குப்போனது .ஆவேசம் அவருக்குள் பொங்கியது .யாராக இருந்தாலும் அல்லது எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடுவது என ஓட ஆரம்பித்தார் ..."எவன்டா...அது...?"என்று கத்தியவாறே ...குதிரை  பாய்ச்சல் காட்டியது….அங்கும் இங்குமாக. தோப்பின் கடைசி வரை ஓடிக் கலைத்தார் ராவுத்தர் . யாரையும் காணோம் .எதுவும் அவர் கண்ணுக்குப் புலப்படவில்லை . மரக்கிளைகள் காற்றில் சல சலப்பைக் கூட்டி கரிய இருட்டில் மேலும் பயத்தைக் கூட்டின . கிழக்கு மூலையில் தோட்டத்தையொட்டி     இருக்கும் பெரிய வேப்பமரத்தின் அருகே முனியப்பன் கோயில் ஒன்று உள்ளது . கூரையில்லாத கோயில் அது. சின்னதாய் பூசி மெழுகிய ஒரு மேடை மீது எண்ணெய் ஊற்றப்பட்ட திரி எப்போதும்  எரிந்து கொண்டிருக்கும். தோல்ஷாப்பின் மெயின் கேட்டுக்குப்  பக்கத்தில்  குடியிருக்கும் மாரியப்பன், விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்வான் . இவர்களின் குலசாமி இது . தோல்ஷாப்பின் கேட் வாட்ச்மேன் வேலை மாரியப்பனுக்கு . வேப்பமரத்தின் எதிரே குதிரை மீது ஆரோகணித்தபடி உருட்டி விளிக்கும் பெரிய கண்களுடன் ,முரட்டு மீசையுமாக உருவிய வாளுடன் பயத்தை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீ முனியப்பன் சுவாமி வீற்றிருப்பார். இந்த முனியப்பன் சாமிதான் பால்சாமி நாயிடு தோல்ஷாப் வீதி மக்களின் காவல் தெய்வம் .இந்த மக்களை மட்டுமல்ல ,தோல்ஷாப்பையும் இந்த  முனியப்பன்தான் கால காலமாய் காத்து வருவதாக இவர்கள் ஐதீகம் . இது குறித்து நிறையக்கதைகள் இரவுகளில் உலாவரும் பீதியைக் கிளப்பியபடி.  இந்தக்கதைகளை ஆத்துப்பாலம் பால்சாமி நாயிடு தோல்ஷாப் வீதியில் குடியிருக்கும் முஸ்லீம்களும் கூட நம்பினார்கள் என்பதுதான் வேடிக்கை ! பக்கத்து வீட்டு ரோஸ்மேரி அக்காவும் , தனலட்சுமியாக்காவும்தான் அங்கு நல்ல கதை சொல்லிகளாக திகழ்ந்தார்கள் . வீட்டு வேலைகளெல்லாம் முடிந்த பிறகு இரவு நேரத்தில் பெண்கள் குழு யாராவது ஒருவரின் வீட்டுத்திண்ணையில் கூடும் . பெண்கள் குழுமினால் நாட்டு நடப்பையா அலசுவார்கள் . வெறும் அக்கப் போர்தான். குழுவில் யார் இல்லையோ அந்தப் பெண்ணைப் பற்றியதாக இருக்கும் அன்றைய அக்கப்போர் . அப்போது சில சமங்களில் இறக்கை முளைத்துப் பறக்கும் வாய் வழி கதைகள் . உம்மாவின் அருகில் ஒடுங்கி உட்கார்ந்தோ அல்லது நிலைப்படியின் மீது அமர்ந்தவாறோ அத்துமுனாவும் இந்தக்கதைகளைக் கேட்டிருக்கிறான். இருட்டை கண்டாலே பயம் கொள்ள வைக்கும் கதைகள் அவை .                                                                         அப்போதெல்லாம் கோடைக்காலங்களில் வீட்டின் முன்பு தான் பெரும்பாலும் ஆண்களெல்லாம் பாய் விரித்துப் படுத்துக்கொள்வார்கள். கொசுத்தொல்லையெல்லாம் அவ்வளவுக்கு இல்லாத காலம் அது. தனலட்சுமியக்கா ,ரோஸ்மேரியக்கா ,முனியமக்கா , ஜானகியக்கா போன்றவர்களும் அவ்வப்போது குழந்தைகளுடன் வெளியே படுத்துக்கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள் ."என்னம்மா ! பொம்பளைங்கள்லாம் வெளியே வந்து படுத்துக்குறாங்க ?" ஒரு முறை அத்துமுனா உம்மாவிடம் கேட்ட போது ."இவுங்கல்லா சேலத்துலருந்து இங்க குடிவந்தவங்க .அங்கெல்லாம் கிராமங்கள்ல இப்படித்தா படுப்பாங்களாம். அந்தப் பழக்கம்தா இங்கயும்  இப்படிப்  படுக்கறாங்கடா....." என்றது உம்மா. வீட்டு வாசலில் படுக்கும் போது சுவரை ஒட்டித்தான் பாயை விரித்துப் படுப்பார்கள் . தெருவில் நடமாட போதிய இடம் விடவேண்டும். இல்லையேல் வழியில் படுப்பவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமாம். அப்படியொரு பய நம்பிக்கை . இரவு நேரத்தில் யார் நடமாடுவார்கள் ....என்ன நடமாட்டம் என்றால் , தனலட்சுமியக்கா சொன்ன சம்பவம் இது .  ஒரு முறை கோடைக்காலத்தில் எல்லோரும் வாசலில் படுத்திருந்தார்களாம்  நடு  ஜாமத்தில் அவர்களின் குழந்தையின் அழுகுரல் கேட்டு , பதட்டத்துடன் விழித்துப்பார்த்தால் .பக்கத்தில் குழந்தையைக்காணோமாம் . பதறியடித்து எழுந்து பார்த்த போது வாசல் திட்டுக்கு இந்தப்பக்கம் அதாவது வீ தியின் மறுபக்கம் காலியாக கிடந்த சின்னப்பள்ளத்தில் குழந்தை விழுந்து கிடந்ததாம்.  குழந்தையாக இருந்ததால் பொழசிருக்காம். இதே பெரியவங்களாயிருந்தா கதை முடிஞ்சிருக்குமாம் ! என்ன ....எது ....என்று  எதுவுமில்லாம் என்ன இது பூடகமான கதை ....! விளக்கமாத்தா சொல்லுங்கக்கான்னு கேட்டப் பத்தா.. .ஸ்ரீ முனியப்பன் தினமும் நள்ளிரவு குதிரையில் ஆரோகணித்து  வீதி உலா வருவாராம் . வழியில் யாராவது படுத்திருந்தா குதிரை மிதிச்சிருமாம். அன்னிக்கு தூக்கத்துல குழந்த தவழ்ந்து வழில வந்திருரிச்சாம் . குழந்தையாயிருக்குறனால முனியப்பன் குழந்தையைத்தூக்கி அந்தப்பக்கம் ஓரமாப்போட்டுட்டு போயிருச்சாம் .                                                                                                     அப்போது பயந்தவாறு கேட்ட கதைகள் எல்லாம் இப்போது அத்துமுனாவுக்கு சிரிப்பை வரவைக்கிறது . தனலட்சுமி அக்காவைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு இந்தக்கதை ஞாபகத்திற்கு வந்து விடும். இந்த முனியப்பனின் நடுஜாம நடமாட்டத்திற்கு பயந்தே இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்குப் போவதை ரொம்ப காலமாக தவிர்த்து வந்திருக்கிறான் அத்துமுனா.  

         அந்த  அத்துமுனாதான் இப்போது எப்படியெல்லாம் மாறிப்      போயிருக்கிறான்...முஹல்லாவே ஆச்சிரியப்ப்படும்படியாக.        (தொடரும் )