புதன், 25 ஏப்ரல், 2012

"கருப்பாயி என்கிற நூர்ஜஹான்" -நாவலை முன் வைத்து

15.4.2012 அன்று கோவையில் அன்வர் பாலசிங்கம்  எழுதிய " கருப்பாயி என்கிற நூர்ஜகான்" -நாவல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.இலக்கிய விமர்சகர் பொ.வேல்சாமி ,கவிஞர் .அறிவன் , முஜிப் ரஹ்மான் மற்றும்  நானும்  நூல் விமர்சனம்  செய்தோம்.பொன். சந்திரன் (பி.யு.சி.எல் ) அவர்கள் தலைமை  வகித்தார்.முகம் பதிப்பகம் சார்பாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.  விழாவின் சில துளிகள். நான் கட்டுரை வாசிக்கும்போது குறிப்பிட்டது. இஸ்லாத்தில் சாதீயம் இல்லை . ஜெயமோகன் போன்றவர்கள் இதை இருப்பதாக கட்டமைக்கிறார்கள் .இப்போது ஜாகீர் ராஜாவும் சேர்ந்து கொண்டிருக்கிறார். ராவுத்தர் ,லெப்பை , மரக்காயர் ,பட்டாணி போன்றவைகள் உட்பிரிவுகள்.இது சாதீயத்தை குறிக்காது . யாரும் யாரிடமும் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளலாம்.பொருளாதார ஏற்றதாழ்வுகள் எல்லா சமூகத்திலும்  உள்ளதுதான் .இதை சாதீயமாக கருதமுடியாது.இதை இஸ்லாத்தில் சாதீயமாக கீரனூர் ஜாகிர் ராஜா போன்றோர் கட்டமைக்கிறார்கள். அவருடைய  'மீன்கார தெரு" நாவலில் இதைதான் கட்டமைத்து  எழுதியுள்ளார்.   அன்வரின் இந்த நாவலின்  களம்  முப்பது  ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறி  நாட்டையே திடுக்கிட ,திரும்பிப்பார்க்க வாய்த்த நிகழ்வு அது. இப்போது  அந்த   மக்களின்  35வயதுக்கும்  மேலான முதிர் கன்னிகளின் வாழ்க்கை  சிக்கலே நாவலின் மையம்.சுற்றிலும் உள்ள முஸ்லிம்கள்  யாரும் இவர்களிடம் பெண் எடுப்பதில்லை இதைத்தான்  இந்த 90 பக்க நாவலில் உரையாடல்கள் மூலம் அன்வர்  கேள்விகளை தொடுத்துள்ளார். இஸ்லாத்தில்  தற்கொலைக்கு அனுமதி இல்லை .ஆனால் நாவலின் முடிவில்  குடும்பமே தற்கொலை செய்து கொள்கிறது.  இந்த 30 வருட  இஸ்லாமிய  வாழ்கையில்  இஸ்லாம்  இவர்களுக்கு எதையும் கற்றுக்கொடுக்கவில்லையா ....?  
             நிகழ்வின் முடிவில் கேள்வி பதில். முஸ்லிம் நண்பர் ஒருவர் அன்வர் பாலசிங்கத்திடம் கேட்டாரே பாருங்கள் ஒரு கேள்வி . "இந்த நாவலை எழுதுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது ? இதை நீ எப்படி எழுதலாம் ?" அவர்கள் பட்ட வேதனையை ,வலியை ,சொல்லுவதற்கு என்ன பெரிய தகுதி வேண்டும் ? உண்மையை சொன்னால் ஏன் இவர்களுக்கு வலிக்கிறது ?
கேள்வியை கேட்டு விட்டு பதிலைக்கூட தெரிந்து கொள்ளாமல் அவர் ஓடிப்போய்விட்டார் என்பதுதான் இதில் பெரிய வேடிக்கை. அப்புறம் எதற்கு இப்படி கேள்வி கேட்டு மேலும் நோகடிக்க வேண்டும் ?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக