செவ்வாய், 24 ஏப்ரல், 2012

கவிதைகள்

எங்கள் வீடு
பக்கத்துக்கு  வீடுகளை விட  உயரமாய்
மேல் தளத்தில்  
ஆஸ்பெஸ்டாஸ்  ஓடு  வேய்ந்த கம்பீரத்துடன்
மழை காலங்களில்
பின்புறம்  சேறும் சகதியும் கொண்ட  
செந்நீர் ஓடும்  வாய்க்காலுமாய்
கரையைத் தொட்டுக்கொண்டு
வேப்பமரமும், கொடுக்காயப்புளி  
முருங்கயுமாய்
முக்கிய சாலைக்கு அருகிலேயே
முன்புறம் விசாலமான
காலியிடமும்
நாலு நண்பர்களுடன்
சாவகாசமாய்  அமர்ந்து
இலக்கியம் பேச  திண்ணையுமாய்
சௌகரியமாய்தான்  இருக்கிறது
குடித்தால் மட்டுமே வந்து
ரகளை செய்யும்
வீட்டுக்காரனின்
சொந்த வீடு.   
            **********
 2.
தினம்  தினம்
செல்ல மகனின்
ஓயாத நச்சரிப்பு
இந்த ஆண்டாவது
அதை
உபயோகப்படுத்தச் சொல்லி...
வாங்கியதிலிருந்து
சும்மாவே  கிடக்கிறது
பரண் மேல்
ட்ராலி சூட்கேஸ்
                ************

ஃபிர்தவ்ஸ்  ராஜகுமாரன்

  நான்கு கவிதைகள் :
     ***********
1.
கண்களை மூடி
தொழுகையில்
நிற்கும் போதெல்லாம்
பூதாகாரமாய்
எதிரே  நிற்கிறது
சைத்தான் !
2.
ஆறறிவுள்ள மனிதன் நான்
என்னால் எதையும்
செய்ய முடியும்
இறுமாந்திருந்த நேரத்தில்
சட்டென நதி கடந்து
மலை மீது பறக்கிறது
ஒரு வண்ணத்துப்  பூச்சி....
3.
எப்போதும்
அடைக்கப்பட்டிருக்கும்
வீடுகளுக்குள் கிடக்கிறது
குழந்தைகள் விளையாடும் தெரு
யாருடைய  சிநேகமும் இன்றி
தொலைக்காட்சி  பெட்டிகள் முன் 
குழந்தைகள் 
சிறைப்  படுதப்பட்டிருக்க
குழந்தைகள் விளையாடாத  தெருவில்
 குடியிருக்கின்றன வீடுகள் .  
4.    
 விளையாடிக் களித்து
குளித்து முடித்து
கரையேறிய  பின்பும்
மிச்சமிருக்கிறது
உடல் முழுவதும்
கடல் .

எப்போதும்
எங்கள்  முகத்தில்
காரி உமிழ்ந்து கொண்டேயிருக்கிறீர்கள்
எங்களின் கதறல்
உங்களின் காதுகளில் விழுவதேயில்லை 
நாங்கள் 
எதுவும் செய்ய இயலாமல்
வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்
மக்களை கொன்று  குவிக்கும்
அவர்கள்
அறைகூவல் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்
பயங்கரவாதத்தை ஒழித்து விடுவதாக.....
அவர்கள் முகமூடி  அணிந்திருப்பது
தெரிந்தும்  அவர்களைத்தான்
நீங்கள் இன்னமும்
நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்
உங்களின் கண்களுக்கு
அவர்களின் காலடியில் கிடக்கும்
மனித உடல்கள் மட்டும்
தெரிவதேயில்லை .....!