ஞாயிறு, 8 ஜூலை, 2012

"சுழி - மாற்று இலக்கிய களம் "- தனி ஆவர்த்தனமாக என் முதல் நிகழ்வு

பொள்ளாச்சியில்  இயங்கி வரும்"சுழி - மாற்று இலக்கிய களம் " மாதந்தோறும்  ஒரு படைப்பாளியை அழைத்து இலக்கிய நிகழ்வை நடத்தி வருகிறது . இந்த மாதம்  நான். நேற்று 01.7.2012 ஞாயிறு  மாலை   நடந்த இலக்கிய நிகழ்வில் ''இன்றைய இஸ்லாமிய படைப்புலகம்" என்ற தலைப்பில் ஒரு அறிமுக உரை நிகழ்த்தினேன்.படைப்பாளிகள்  மற்றும்  படைப்புகளின் நிலை குறித்து  கட்டுரை  வாசித்தேன் . பிறகு  பொதுவான சில விஷயங்கள்  பேசினேன். அதன் சுருக்கம் :
- ஆங்கிலம் படிக்க மறுத்ததன் விளைவு  முஸ்லிம் சமூகம் கல்வியில்  மிகவும் பின் தங்கியுள்ளது . கல்வியில்  மட்டுமல்ல    எல்லா துறைகளிலும்  பின் தங்கி உள்ளதைப்போலவே  எழுத்துலகிலும் பின்தங்கியே உள்ளது . வாசிப்பு அனுபவம்  மிக குறைவும் ஒரு காரணம். மார்க்க நூல்கள்  தவிர  மற்ற படைப்புகளை  படிப்பது  "ஹராம்"   என்று இன்னும் கூட சொல்லிகொண்டிருக்கிறார்கள் .ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று கதை எழுதும் போக்கை  இஸ்லாமிய பத்திரிகைகள் இன்னும் கை விட்ட பாடில்லை. இதனால் படைப்பாளன் தேங்கி விடுவது பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் ஜாகிர் ராஜா ,சல்மா போல இல்லாததை எழுதி இஸ்லாத்தை கொச்சை படுத்தக்கூடாது.ஜாகிர் ராஜா  தன் முதல் நாவலான " மீன்காரத்தெரு" வில் பொருளாதார  ஏற்றத்தாழ்வுகளை -இஸ்லாத்தில் ஜாதீயம் இருப்பதாக கட்டமைத்து  அது உண்மை என்பதை நிறுவி விட்டார் . என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரிடம் இது குறித்து விளக்கம் கேட்டபோது ,எங்க ஊர்ல (கீரனூர்) இருக்குங்க என்றார். உங்க ஊர்ல இருப்பதை இஸ்லாத்தில் இருப்பதாக சொல்லுவது நியாயமா ....? என்றால் போட்டு குழப்புகிறார். இந்த நாவலின் தொடர்ச்சி அல்லது நீட்சிதான் " கருத்த லெப்பையும்" ," மீன் குகை வாசிகள் " ஆகிய இரண்டு நாவல்களும் .மனம் பிறழ்ந்த பெண்ணைப்பற்றிய நாவல் என்கிற பெயரில் நவீனத்துவ வடிவம் என்று  குழப்பிய  குறுநாவல் " வடக்கே முறி அலீமா ".
   அதே போல கவிஞர் சல்மா வின் முதல் நாவல் " இரண்டாம் ஜாமங்களின் கதை " முஸ்லிம் பெண்களின் வாழ்வியலை எழுதிச்செல்லும் வரிகள்  என்று ,பெண்களின் பார்வையில் சொல்லப்பட்ட படைப்பு என்று பாராட்டப்பட்டாலும்   ஒட்டு மொத்த இஸ்லாமியப் பெண்களையும் கொச்சைப்படுத்திய படைப்பாகத்தான் நான் பார்கிறேன் . நாவலில் வரும் பெண்கள் எல்லாம்  கெட்டவர்களாக இருக்கிறார்கள் . கலகம் புரியும் இந்த பெண்கள் மனச்சிதைவுகளுக்கு ஆளானவர்களாகவும், கடைசியில் இறந்து போவர்களகவும் இருக்கிறார்கள். அப்படியான பெண்களுக்கு இப்படியான தண்டனைதான் கிடைக்கும் .....  அப்படியென்றால்  பெண்கள் இப்படியாக இருக்கக்கூடாது  என்றுதான் சல்மா நாவலில் வலியுறுத்துகிறாரா...?
         அதன் பிறகு  உரையாடல்  நிகழ்வில்
    பர்தா -பற்றிய கேள்வி  விரிவாக எழுந்தது. பர்தா போட்டு முஸ்லிம் பெண்களை அடக்கி வைப்பதாக குற்றம் சாட்டினார்கள் . நான் இல்லை என்று மறுத்தேன்.
பர்தா  அணிவதால் எந்த வகையிலும் முஸ்லிம் பெண்களின் ஆளுமை குறைந்து விடுவதில்லை -இது அவர்களுக்கு ஒரு பாது காப்பு . அவர்களேதான் விரும்பி அணிகிறார்கள் .என்றேன் .
சிறு வயது பெண் குழந்தைகளுக்கும் கூட பர்தா வந்து விட்டது. இதை நான் ஆதரிக்கவில்லை .குழந்தைகள் கேட்டு அடம் பிடிப்பதால் பெற்றோர்கள்  வாங்கி கொடுக்கிறார்கள் .  .பெண்கள் முகத்தை மறைத்து கண்களை மட்டுமே  காட்டிச்செல்வதையும் ,வயதானவர்கள்  அணிவதிலும் எனக்கு உடன் பாடில்லை என்றேன். நபிகள் நாயகமே  முகத்தை மறைக்கச் சொல்லவில்லை .ஆனால் இவர்கள் அப்படிச்செய்கிறார்கள். இவளவு கஷ்ட்டப்பட்டு இவர்களை யார் வெளியே வரச்சொன்னார்கள் ....? வீட்டுக்குள்ளாகவே அடைந்து கிடக்க வேண்டியதுதானே ....? இவர்களாகவே இப்படிச்செய்வதால் தான் முஸ்லிம் பெண்களை ஆண்கள்  அடக்கி வைப்பதாக மாற்று மதத்தினர் கருகின்றனர்  என்று ஏன் கருத்தை சொன்னேன் .
        கோவை கலவர நிகழ்வுகள் குறித்தும் நடந்த உண்மைகள் பற்றியும் தெளிவு படுத்தினேன். மோடி பற்றி  ஒருவர் கேட்டார் . அதாவது இப்போது அங்கு முஸ்லிம் சந்தோஷமாக  வாழ்கிறார்களே  என்கிற ரீதியில்.  இந்த "'போரா" முஸ்லிம்கள்  மோடியை பார்ப்பது , காலில் விழுவது மாக தினமும் நாளிதழ்களில் போட்டோ வருகிறதே ....அதனால் எழுந்த கேள்வி இது . அவர்கள் முஸ்லிம்களே அல்ல என்றேன் .தாயின் காலில்  விழுவதை கூட இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.  ,அப்படியிருக்க முஸ்லிம்களை    இனப்படுகொலைகள்  செய்த இவன்  காலிலோ விழும்  ஒருவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும் ..?
 ரசூல் பிரச்சனை ,கோவை கலவரம் மற்றும் இஸ்லாம் குறித்த இன்னும் சில சந்தேகங்களுக்கு  பதில் சொன்னேன் 
      # தனி  ஆவர்த்தனமாக என் முதல் நிகழ்வு இது .! பயந்து கொண்டே சென்றேன் .ஆனால் ....நிறைவாக  பேசிவிட்டதில் சந்தோசம் . சுழி அமைப்பினருக்குமிக்க நன்றி கூறி விடை பெற்றேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக