ஞாயிறு, 8 ஜூலை, 2012

"எழுதுவதெல்லாம் ..பொன்னல்ல " -2

அப்போது சுஜாதாவுக்கு அடுத்து பட்டுக்கோட்டை பிரபாகரையும் ,ராஜேஷ் குமாரையும் விரும்பிப்படித்துக் கொண்டிருந்த காலம். கிரைம் கதைகள் மீது எனக்கும் ஒரு மிகப்பெரிய ஈடுபாடு வந்துவிட்டதில் , நாமும் கிரைம் கதை இளவரசன் ஆகிவிடலாம் ( அப்போது கிரைம் கதை மன்னனாக ராஜேஷ் குமார் இருந்தார். அப்ப நான் இளவரசன் தானே....?) என்று ஆசை வந்து விட்டது . எனது முதல் ஒருபக்க கிரைம் சிறுகதை " ஓங்கி ஒரே குத்து " -சாவி- இதழில் வந்தது.பிறகு "உங்கள் ஜூனியர் " " நாவல் டைம் '" போன்ற கிரைம் மாத நாவல்களில் கிரைம் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன் . இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ராஜேஷ் குமாரை சந்திப்பதை நாங்கள் நண்பர்கள் வழக்கமாக கொண்டிருந்தோம். அப்போது அடுத்த நாவல் கதை குறித்தெல்லாம் எங்களிடம் உரையாற்றுவார் ராஜேஷ் குமார்.
தமிழகத்துக்கு ஒரு உன்னதமான கிரைம் நாவலாசிரியர் கிடைக்காமல் போனதுக்கு ''கணையாழி " இதழ்தான் காரணம்...!
கணையாழி -யை முதன் முதலில் பழைய புத்தகக்கடையில்தான் பார்த்தேன். டவுன்ஹாலில் மணிகூண்டு அருகே அப்போது வரிசையாக பழைய புத்தகக்கடைகள் தான் இருக்கும். இப்போது அந்த இடம் முழுக்க ரெடி மேடு ஆடை துணிக்கடைகள். வாரந்தோறும் சனி அல்லது ஞாயிறு அங்கு சென்று விடுவேன். நிறைய நாவல்கள் படிக்க கிடைத்தது அங்கு.
லெண்டிங் லைப்ரரியகவும் அந்த பழைய புக் ஸ்டால்கள் செயல் பட்டன. இருபத்தைந்து ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டால் போதும். வாரம் இரண்டு புத்தகங்கள் கிடைக்கும் .படித்துவிட்டு திருப்பிக்கொடுத்து விடவேண்டும். வாடகை ஒரு ரூபாய். அப்படியான காலத்தில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பழைய இதழ்களையெல்லாம் கொஞ்ச நேரம் புரட்டிக்கொண்டிருப்பேன்.இலக்கியம் -இலக்கிய இதழ்கள் பற்றியெல்லாம் வெறும் கேள்வி ஞானம்தான் அப்போது . எதேட்சையாக அப்படி ஒரு நாள் கிடைத்தது அந்த
உன்னதமான பொக்கிஷம்..!
( தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக