ஞாயிறு, 27 மே, 2012

சிந்தனை சரம் -மாத இதழில் நான் எழுதிவரும் முதல் நாவல் தொடர் : எழுபத்தி மூன்றாவது கூட்டம் ( நாவல்):

                           எழுபத்தி மூன்றாவது  கூட்டம்

 நாவல்:

-          “மேலும்  நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வின் கயிற்றை பலமாகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.(உங்களுக்குள் தர்க்கித்துக்கொண்டு) நீங்கள் பிரிந்து வீடாதீர்கள். உங்கள் மீது  அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப்பாருங்கள்நீங்கள் ஒருவருக்கொருவர்  விரோதிகளாகப்   பிரிந்து இருந்த சமயத்தில், அவன் உங்கள் இருதயங்களில் (இஸ்லாத்தின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே, அவனுடைய அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள்.....:"                                                                                                         
                                              ( அல்குர் ஆன்- 3 : 103 )
                                 ***************************

                           அத்தியாயம் – 1
         மெயின் ரோடிலிருந்து  வலது புறம் திரும்பி  கிழக்குப்புறமாக   செல்லும் சாலை இஸ்மாயில் ராவுத்தர் வீடு வரை  ஒழுங்காக இருக்கும். அதன் பிறகு குண்டும் குழியுமாக  குப்பை சகிதமாக சிறுசந்து போல சிறுத்துப் போய்க்கிடக்கும்.மழைகாலங்களில் நடக்கவே முடியாது. மொகல்லா வாசிகள்  புலம்பிக்கொண்டே சேற்றில் நடந்து போய் வருவார்கள். ஜமா அத் நிவாகத்துக்கு  இது பற்றியெல்லாம் கவலை கிடையாது. இஷா தொழுகைக்குப்பிறகு  பள்ளியின்  வெளிபிராகாரத்தில்  உட்கார்ந்து  கொண்டு ஊர்வம்பு  பேசவே அவர்களுக்கு நேரம் சரியாகிவிடும். இதில் மொகல்லா பிரச்சனைகளும், மக்கள் பிரச்சனைகளைப் பற்றியும்  பேச எங்க நேரம் இருக்கும்
             இஸ்மாயில் ராவுத்தர் வீட்டுக்கு முன்பாக இடது பக்கம் செல்லும் பாதைதான் பள்ளி வீதி. சாலை பிரியும் முக்கில் சுன்னத் ஜமா அத் பள்ளிவாசல். மெயின் ரோடிலிருந்து பார்த்தாலே பள்ளியின் மினாராக்கள் தெரியும். அந்தக்காலத்தில் சின்னதாக இருந்த பள்ளிவாசலும் ,மினாராவும் அனீபா  ஹாஜியார்  வாப்பாவின் காலத்தில்மராமத்து செய்யப்பட்டு கொஞ்சம்  பெரிது படுத்தப்பட்டது. ஜலீல் ஹாஜியார்  தலைவரான போது  மினாராக்கள் இன்னும்  பெரிது படுத்தப்பட்டது. "எதுக்கு மினராவ இவளவு பெருசாக்கட்டுறாங்க..."ன்னு மொக்கல்லாவுக்குள்  பேச்சு  எழுந்தது. " செலவு கணக்க பின்ன எப்பிடியாக்கும் காட்டறது ...?" விஷயம் புரிந்தவர்கள் சொல்லி சிரித்துக்கொண்டார்கள் . " நம்ம ஊரு பள்ளி மினராவுல மட்டும்  ஏன் புறாக்கள்  வசிப்பதில்லை ..?"         ரொம்ப காலமாகவே   'அத்துமுனாவுக்குள் இருக்கும் கேள்வி இது. கேள்வி மட்டுமல்ல ஆதங்கமும் அவனுக்குள் உண்டு.பெருநாளுக்கு துணியெடுக்க  கடை வீதிக்கு செல்லும்  போது சில சமயம்   அத்துமுனாவையும் அழைத்துச் செல்லுவார்  வாப்பா. நகருக்குள்  நடுமத்தியில் இருக்கும் பெரிய பள்ளிவாசலைத் தாண்டிதான் துணிக்கடைகள்  இருக்கும். மாலை வேளையில்  சூடில்லாத  சூரியக்கதிரொளியின் பின்னணியில் 'பட பட ..'வென  சிறகடிதுப்பறந்து கொண்டும், சாலையோரங்களில் தாவிக்கொண்டும்  'குக்குடு..... குடுவென...' திரியும் புறாக்களைப்பார்த்தவாறு  மெல்ல நடப்பான் அத்துமுனா."ரோட்டப்பாத்து நடறா....." வாப்பாவின்  கர்ஜனை கிடுகிடுக்க  வேகமாய் நடையை  எட்டிப்போட்டு வாப்பா பின்னால் ஓடுவான்.அந்தப்புறாக்களை இன்னும் கொஞ்ச நேரம் நின்னு  பார்க்கத்தோன்றும்.திரும்பித்திரும்பி  பார்த்துக்கொண்டே  நடப்பான். "என்னடா  திருவாத்தங்கணக்கா .. பெறாக்கு பாத்துட்டு  வாறே....?" மண்டையில் ஒரு மேடு மேடுவார் வாப்பா. துணி எடுத்துட்டு திரும்பி வரும்போது  இருட்டாகிவிடும்.நகரின் இரவு வெளிச்சத்தில் ஒரு சில  புறாக்கள்  மட்டும் கழுத்தைக் குறுக்கியவாறு பார்த்தபடிக்கு மினாராக்களின் பக்கவாட்டு திண்டின் மீது உட்கார்ந்திருக்கும்.இதுகளை   பள்ளிக்காரர்கள் வளர்கிறார்களா.... இல்ல அதுகளாகவே  இங்க வந்து வசிக்கின்றனவா .......என்ற  சந்தேகம் அவனுக்குள் எழும். வாப்பாவிடம் கேட்டால்" என்னடா பெறாந்தத்தன கேள்வி கேக்குறே ..."ன்னு மண்டையில் மேடுவார்.வாப்பாவின் கோபத்துக்கும், அடிக்கும் பயந்து கொண்டே பதில் கிடைக்காத நிறைய கேள்விகள் அவனுக்குள் உண்டு.   எதிலும் ரசனையோ   ஈடுபாடோ    வாப்பாவுக்கு ஏன் இல்லாமல் போனது ? எந்நேரமும் கோபக்கார மனுஷனாகவே இருக்காரே வாப்பா……..இதுக்கு ஏதாவது காரணம் இருக்குமோ ....?                அவனுக்குள் அவ்வப்போது வாப்பா குறித்து இப்படி கேள்விகள் எழும். எது பற்றியும் வாப்பாவிடம் அவன் சகஜமாக பேசிக்கொண்டதாக நினைவில்லை. உறவினர்கள்  மத்தியிலும்  வாப்பாவைக் கண்டால் எல்லோருக்கும்  ஒரு பயம் தான்.வாப்பாவின் சுபாவம் அப்படிஉம்மாவிடம் கூட வாப்பா அன்பாகப்பேசி  அவன் பார்த்ததேயில்லை. எதைப்பற்றிக்கேட்டாலும் திட்டு விழும்                ." தெரிய வேண்டிய நேரத்துல எல்லாந்தெரியும் .." என்பார்.வாப்பாவுக்கு சீக்கிரம் கோபம் வந்து விடும்.சில சமயம் கண்ணு ,மூக்கு தெரியாமல் அடித்து விடுவார். இப்படி அடிவாங்குவதிலும்  ஒரு லாபம் இருந்தது. அடிவாங்கிய அன்று நிறைய தின்பண்டங்கள் கிடைக்கும். இல்லையேல் சினிமாவுக்கு கூட்டிப்போவார். அதுவும் எம்.ஜி.யார்  படம். வாப்பா தீவிர   எம்.ஜி.ஆர்  ரசிகர்.வாப்பாவுடன்  எம்.ஜி.யார்  படம் பார்த்துப்பார்த்து  அவனும்     எம்.ஜி.ஆர்  ரசிகனாகிவிட்டான்.படிக்கும் காலத்தில் எம்.ஜி.ஆர்  ரசிகர்கள் கோஷ்டியில் தான்    இருப்பான். சிவாஜி ரசிகர்கள் எதிர் கோஷ்டியில் இருப்பார்கள். இப்போது வாப்பாவின் சுபாவமே மாறிவிட்டது.அவன் பெரியவன் ஆனதிலிருந்தே இந்த மாற்றம் ஏற்பட்டதை அவன் உணர்ந்திருந்தான்.சின்னவனாக இருந்த போது பார்த்த அதே வாப்பா தானா இவர்...? இப்போது  வாப்பாவைப் பார்கும் போது   பாவமாகத் தோன்றும். அதே கோபக்கரராகவே இப்போதும் வாப்பா இருந்திருக்கலாம்   என்று  அடிக்கடி அவனுக்குள் தோன்றும்.காலச்சுழலில்  தவிர்க்க முடியாத மாற்றங்களா இவை. நான் கூட  கோபக்கரனாக  மாறிப்போகலாமோ.......ஆகலாம். காலம் எதையும் செய்யும்.                                      
             அப்துல் முனாப்   வீடு திரும்பிக்கொண்டிருந்தான். மேற்கு வானம் செக்கச்செவேல் என  அரைத்துப் பூசியதைப் போல படுதா ஓவியக்காட்சி போலவும் இருந்தது. மாலை வேளைகளில்  அல்லது இது போன்ற இயற்கை காட்சிகளைக்காணும்   போது  கொஞ்சம் ரசனை மிக்கவனாகி விடுவான் முனாப். குளத்து மேட்டிலிருந்து  இந்தக்காட்சியைக் காண வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்குள் ஓடியதுமாலை இன்னும் கொஞ்சம் மங்கி விட்டால் செக்கர் வானம் காண  இன்னும் அழகு கூடி மிக ரம்மியமாய் தோன்றும். இப்போது அஜீஸ் இருந்தான் என்றால் காதல் வயப்பட்ட  கிறக்கத்துடன்  இந்தக்காட்சியைப் பார்த்து  உடனே கேமராக்கோணம்  பார்க்க ஆரம்பித்து விடுவான். சினிமா இயக்குனராவது  அவன் கனவுகளில் ஒன்று.எல்லா காட்சிகளையும்  இதே கண்ணோட்டத்திலேயே பார்ப்பான். சில சமயம் எரிச்சலாக இருக்கும்.
               உக்கடத்தில்  இறங்கி வண்டிக்கார வீதி வழியாக நடக்க ஆரம்பித்தான் அவன். சரக்கு எடுக்க இரண்டு நாட்களுக்கு முன் பெங்களூர் சென்றவன்.இபோதுதான் ஊர் வந்து சேர்த்துள்ளான். மாதத்தில்  இரண்டு மூன்று தடவை  பெங்களூர் சென்றாக வேண்டும்.அங்கிருந்து ரெடிமேடு ஆடைகள், ஜீன்ஸ் பேண்ட் இதர துணிவகைகளை   கொள்முதல் செய்து வந்து இங்கே மொத்தமாகவும் ,சில்லறையாகவும் விற்பனை செய்வதுதான்  அப்துல் முனாபின் தொழில். ஆரம்பத்தில் வாப்பாவுக்கு இந்த ஏவாரம்  பிடிக்கவில்லை. ஏற்கனவே  மூத்தவன் முபாரக்  பனியன் ,ஜட்டி எவாரந்தான் செய்கிறான். அத்துமுனா வும் ஏன் அதே தொழிலுக்குப் போகணும்.....என்பது அவரின் கேள்வி.  
ஈரோடு சந்தைக்குச் சென்று பனியன் ,ஜட்டி ,வேட்டி ,துண்டு ,லுங்கி  போன்ற துணி வகைகளை  கொள்முதல் செய்து வந்து இங்கே கடைவீதியில் சின்னதாய் கடை போட்டு  வியாபாரம் செய்து வந்தார் அப்துல் காதர் ராவுத்தர். பெரியவன் முபாரக் படிக்கவில்லை.பண்டிகை காலங்களில் வியாபாரத்தைக் கவனிக்க  வாப்பாவுடன் கடைக்கு  வந்தவன் அப்படியே வாப்பாவுக்கு ஒத்தாசையாகி விட்டான். சம்பளம் இல்லாமல் ஒரு ஆள் கிடைத்த சந்தோசத்தில்  அவன் படிப்பு குறித்து அப்துல் காதர் ராவுத்தர்  கவலைப்படவில்லை.   அக்கறை கொள்ளவும் இல்லை. பிற்பாடு இந்த சங்கடம் அவருக்குள் கனன்று கொண்டே இருந்ததால் சின்னவன் முனாப் பையாவது  நல்ல படிக்கவைக்கணும் என்பது அவரின் நாட்டமாக இருந்தது . ஏதாவது ஒரு துறையில் அத்துமுனா பிரகாசிக்க வேண்டும் என்ற கனவு  எந்நேரமும் அவருக்குள்  இருந்து கொண்டே இருந்தது. முனாஃப்பிடமும் இதை அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார். 'அத்துமுனா ,அண்ணன் மாதிரி நீயும் ஏவாரியாகண்டாம்எல்லாம் ஒரே தொழில்ல  இருக்கண்டாம்  கிட்டியா.....  நிய்யி    நல்லாப்படிச்சு  நல்ல  உத்தியோகத்துக்கு  போவணும். உங்கும்மாவுக்கும்  இதுதா  ஆச. என்ன மைமூன்  நாஞ் சொல்றது....?’  என்று  மனைவியைப்பார்ப்பார்  ராவுத்தர். ” எம்மொவன் ஆபீசுல  வேல செய்யணும்னு  எக்கும் ஆசயிருக்காதா பின்ன ......அத்துமுனா  உம்மாட  ஆசய   நிய்யி  நிறவெத்தணும்  மொவனே ....." வாஞ்சையுடன்  சொல்லிவிட்டு  அத்துமுனாவின்  தலையைத் தொட்டு நீவி விடுவாள் மைமூன் பீவி.           
            எஸ் எல் சி  படித்தவுடன்  அவனை இஞ்சினியரிங்  படிக்க வைக்க முயற்சித்தார்  வாப்பா. பணம் பிரச்சனையானது. தன் அண்ணன் அனீபா ராவுத்தர்  வீட்டுக்கு ஓடினார்  அப்துல்  காதர். தன் மகனோட படிப்புக்கு  அண்ணன் எப்படியும்  உதவுவார் என்று மிகுந்த நம்பிக்கையிருந்தது அவருக்கு. " காதரு..! நாஞ் சொல்றேன்னு  தப்பா நெனைக்காதே, அத்துமுனா படிச்சுட்டு என்ன செய்யப்போறான்....? இந்தக்காலத்துல  வேல கெடைக்குறது குதரக்கொம்பாயிருக்கு.காச செலவு செஞ்சு படிச்சுட்டு சும்மா சுத்துறதுக்கு  பேசாம நிய்யி அவனுக்கு ஏவாரத்த பழக்கி உட வேண்டியதுதானே....? பெரியவனுக்கு மாதிரி இவனுக்கும் ஒரு கட போட்டுக்கலாமெல்ல ...? அப்பறம்  இந்த வருஷம் நா அஜ்ஜுக்குப் போவலாமுன்னு  இருக்கேன். அதுக்கே பணத்துக்கு  எனக்கு ஒரு வழியும் தெரியல. இப்பப்போயி நீ என்கிட்ட வந்து    பையன் படிப்புக்கு பணம் கேக்குற பாரு...." சொல்லிவிட்டு பெரிதாக ஒரு கணை  கணைத்தார் அனீபா ராவுத்தர். பிறகு உள்ளே பார்த்தவாறு " ள்ளா..! காதருக்கு சாயா கொண்டா ..." என்றார். "வேண்டாமண்ணா.... வரும்போது ஊட்டுல குடிச்சுட்டுதா வந்தே. வரேண்ணா. மைனி….! வர்றே ...." உடனே விறு விறுன்னு  கிளம்பி வந்து விட்டார் அப்துல் காதர். அண்ணன் வீட்டிலிருந்து  இப்படி ஒரு நாளும்  அவர் கிளம்பி வந்ததே இல்லை.அண்ணன்  இப்படிப்பண்ணிப்போட்டாரே என்ற  இந்த சங்கடம்ரொம்ப நாட்களுக்கு அவருக்குள் இருந்து கொண்டிருந்தது.                            " எங்கண்ணன் பெரிய கொடை வள்ளலுன்னு அடிக்கடி பீத்திக்குவீங்களே.....! எம்படிப்புக்கு  ஏன் அந்த கொடை வள்ளல் உதவி செய்யலே .....?"   பொறுமை இழந்தவனாக  வாப்பாவிடம் கேட்டே விட்டான் அத்துமுனா. "அப்பிடிகேளுடா மொவனே ...." உம்மாவும்  துணைக்கு சேர்ந்து கொண்டது. அந்த நிலையிலும்  அண்ணனை  விட்டுக்குடுக்க  அவருக்கு மனம் வரவில்லை." போடா போக்கத்தவனே.. அவருதா தன்னோட நெலமைய  தெளிவா சொல்லிட்டாருல்ல...அஜ்ஜுக்குப் போறதுக்கே பணம் புரட்ட வழி தெரியலேன்னு புலம்புறாரு.... இந்த சமயுத்துல நமக்கு எப்படித்தருவாரு....? " அவனை சமாதனப்படுத்தினார்.   "அதானே ...உங்கண்ணன சொன்னா  ஒத்துக்க மாட்டீங்களே .....?" மைமூன் பீவி பழிப்பு காட்டினாள்." போளா உம்வேலயப்பாத்துட்டு....." அப்துல் காதர் கோபப்பட்டார்.
               பணத்துக்காக வேறு  எங்கெங்கோ அலைந்து திரிந்து  கேட்காதவர்களிடமெல்லாம் கேட்டு பணத்தைப் புரட்டுவதட்குள் போதும் போதென்றாகிப்போனது.இருந்தும் பணம் போதவில்லை. அதற்குள் கெடுவும் முடிந்து போனது. இப்படியாக  வாப்பா அப்துல்காதர் ராவுத்தரின்  கனவும் , உம்மாவின்  ஆசையும், அத்துமுனாவின் எதிர் கால இலட்சியங்களும் தகர்ந்து போக , அவன் கொஞ்ச நாட்களாக பித்துப்பிடித்தவனைப்போல சுற்றிக்கொண்டிருந்தான். காஜா உசேனும் ,அஜீஸும் அவனை ஒருவழியாக தேற்றினார்கள். கூட வந்து ஏவாரம் பழகச்சொன்னார் வாப்பா. 'எங்கடைக்கு வந்துர்றா....' அண்ணன் முபாரக்கும் கூப்பிட்டான். " ஆமா அண்ணன் பெரிய துணிக்கடல் வச்சிருக்கார்... .அவர் கடைக்குப்போறதுக்கு....." உம்மாவிடம் கோபத்தைக்காட்டினான். உம்மா எதுவும் பேசாமல் சங்கடத்துடன்  அவனைப்பார்க்க ," படிக்கறவனை படிக்க வைக்காதீங்க. அப்பறம் நம்மாளுங்க படிக்கறேதேயில்லேன்னு  ஆளாளுக்கு கூப்பாடு  போட்டுட்டிருங்க.. " என்று கத்திவிட்டு  அங்கே நிற்கப்பிடிக்காமல் இடத்தை காலி செய்தான் அத்துமுனாஎத்தனை நாட்களுக்குத்தான் வெறுமனே சும்மா சுற்றிக்கொண்டிருப்பது .தெரிந்த   லாரி புரோக்கர் அலுவலகத்தில் அவனை சேர்த்திவிட்டார் வாப்பா.
"டே! முனாப்  டீ வாங்கிட்டு வாடா..." , " முனாப் ! ஒரு பாகெட் சிகரெட் வாங்கிட்டு     வா .." இப்படியாக ஒரு பொடிப்பையன் ரேஞ்சில் அவனை உரிமையாளர் ஏவி விட ,இரண்டாவது நாளிலேயே  வேலை பிடிக்கவில்லை என ஓடி வந்து விட்டான் அத்துமுனா. "  டே! புரோக்கர் ஆபீஸ் வேலைய கத்துக்கிட்டியனா  பின்னாடி  நிய்யும் இப்பிடி ஒரு ஆபீஸ் போட்டு உக்காந்துக்கலாம்...கிட்டியா... சாயா  வாங்கிட்டு வரச்சொன்னாங்களாம்.....இவன் ஓடி வந்துட்டானாம்......" கோபத்துடன்  திட்டித்தீர்த்தார் வாப்பா. இப்படியாக இரண்டு ,மூன்று இடங்களில் வேலைக்குப்போனான் அவன். எதுவும் சரியாக அமையவில்லை. " பேசாம வாப்பவோடவே  போலாமல்லடா  மொவனே .." என்றது உம்மா மிகுந்த சங்கடத்துடன். உம்மா சொல்வதும் சரியாகப்பட்டது இப்போது . வாப்பாவுடன் சென்று வியாபாரம் பழகினான். வியாபார நெளிவு சுளிவுகள்  கைவசம் ஆனதும் பனியன் ,ஜட்டியை விட்டு  ரெடிமேடு  ஐட்டத்துக்கு வியாபாரத்தை மாற்றினான்.பிறகு பெங்களூர் சென்று  சரக்கு எடுத்து வந்து  தன் வியாபார தரத்தை  உயர்த்திக்கொண்டான். ஆனாலும் தான் படிக்க முடியாமல்  போனது குறித்த  கவலையும்  வருத்தமும்  இன்னும் அவனுக்குள் இருந்து கொண்டுதான்  இருக்கிறது.                                    
            
      ‘  பித்னா பஜார்’ :
                                 வீடு போவதற்கு முன்  'பித்னா பஜார்' செல்ல முடிவெடுத்தான் அத்துமுனா. நண்பர்களை இப்பவே பார்த்து விட்டால் ,பிறகு மறுபடி இங்கு வரவேண்டியதில்லை.பித்னாபஜார் கோட்டைமேடு  பகுதியின் பிரதான இடம்.எல்லா வீதிகளும் சங்கமிக்கும் இடமட்டுமல்ல, சகலமும் உருவாக்கப்படும் இடம் இது ! பொதுக்கூட்டம் நடத்துபவர்களுக்கு இது இக்பால் திடல். திடல் என்றால் பெரிய மைதானம் ஏதும் கிடையாது .நான்கு வீதிகள் சந்திக்கும் பகுதி .நகரை நோக்கி மேற்கில் செல்லும் வீதி   இப்ராஹீம்  ஹாஜியார்  வீதி. கிழக்குப்பக்கம் பள்ளிவாசலை நோக்கிச்செல்லுவது  பள்ளிவீதி.. வடக்கு பக்கம் செல்லுவது  லேனா வீதி .இந்த வழியாகவும் நகருக்குள் செல்லாம் . எல்லா வீதிகளின் இருமருங்கிலும்  வீடுகள்தான். இடையிடையே  ஒரு சில பெட்டிக்கடைகளும் உண்டு. இக்பால் திடலில் தான்  ஹோட்டல் மற்றும் எல்லாக்கடைகளும். அதனால் எந்நேரமும்  இந்தப்பகுதி  கூட்டம் நிரம்பியதாகவே இருக்கும்.   வங்கக்கவி அல்லாமா இக்பாலின் நினைவாக  பொதுக்கூட்டம் நடத்துபவர்கள்  இதை இக்பால் திடல் என்று குறிப்பிட, எல்லா கட்சிகளுக்கும்  இந்த இடம் இக்பால் திடலாகிப்போனது .நண்பர்கள் வட்டத்திலும் ,பொதுவாகவும் இந்த பகுதியின் பெயர் பித்னாபஜார் . பித்னா என்றால் அரபியில்  குழப்பம் என்று பெயர்எல்லாவகையான பிரச்சனைகளும், குழப்பங்களும்  இங்குதான்  உருவாகும் - உருவாக்கப்படும். ஒண்ணுமே இல்லாத பிரச்சனைகள் கூட இங்கிருந்துதான் கண் ,காது,மூக்கு எல்லாம் ஒட்டப்பட்டு பூதாகாரமாய் வெளிப்படும்.       முத்துராவுத்தர்  ஹோட்டலின் முன் புறமும் காஜா பேக்கரியிலும்,மீரான் சைக்கள் கடையின் முன்பாகவும்   எல்லா வயதினரும்   நாள் முழுவதும் குழுமி பேச்சு இரவு வரை நீளும். இப்படியான பேச்சுக்களின் போதுதான்  பித்னாக்களும்  உருவாகும். அப்போது இந்த இடம் பித்னபஜார்  என்ற புகழ்  மிக்க பெயரைப்பெற்றிருக்கவில்லை . அந்த வீதியின்  பெயரான  இப்ராஹீம்  ஹாஜியார்  வீதி என்று சொல்லப்படும். அல்லது  இக்பால் திடல். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தான்  அத்துமுனா எட்டாவது வரை படித்தான். அந்த பள்ளியின் பெயர் பேட்டை ஸ்கூல். அப்போது இந்தப்பகுதியில்   லாரிபேட்டை இருந்தது. எனவே இங்குள்ள ஸ்கூல் பேட்டை ஸ்கூல் என்றழைக்கப்பட்டது. இப்போதும் அதே பெயர்தான்.
வண்டிக்கார வீதி சந்தில்  நிறுத்தப்பட்டிருந்த  கைவண்டி  மீது  அஜீசும் , காஜா உசேனும் , ஜானும் உட்கார்ந்திருந்தார்கள். தன் கைவண்டி மீது  இவர்கள்  உட்கார்ந்திருப்பதை அமீது பார்க்க வேண்டும் இப்போது. ' லபோ....திபோ...ன்னு  கூப்பாடு போட்டு, எல்லோரும்  அவனை திரும்பிப்பார்க்கும் வகையில்  ஒரு பீதியை உருவாக்கிவிடுவான். " எக்கு சோறு போடுறதாக்குமேயிது..இதுக்குமேல ஒக்காந்துட்டு  வெட்டி  நாயம் பேசுறது  படச்சவனுக்கே அடுக்காது கிட்டிங்களா....." என்று தன் கீச்சுக் குரலில்  கத்திவிட்டு ," மொதல்ல  இதுக்கு மேலருந்து  ..எந்திரிங்க.." தைய..... தியனு குதிக்க ஆரம்பிசுருவான்.   வேண்டுமென்றே அவனிடம்  வம்பு வளர்ப்பார்கள்.                         " கைவண்டி என்னடா சொல்றே ..?"
வண்டி எப்பிடிடா  சோறு போடும் ..? நீதாண்டா கஷ்டப்படுறே....நீதாண்டே சம்பாரிக்குறே....அப்பறம் வண்டி சோறு போடுதுன்னு ஏண்டா பொய் சொல்றே....?"
'"மொதல்ல  என்திர்ங்க.. சொல்றன்....." குதிப்பு  நிற்காதுமுஹல்லாவுக்குள்  'கைவண்டி' என்பதுதான் அவனுடைய அடையாளம். அதுவே  அவனுடைய  பெயராகியும்  விட்டது. ஒரு சிலர்தான் 'அமீது' என்று அழைப்பார்கள்.பெரும்பாலும் 'கைவண்டி'தான்எங்கு எந்த விசேஷமாக இருந்தாலும்  அமீது முதல் ஆளாக வந்து நிற்பான். சாமான்கள் எல்லாம் அமீது கைவண்டியில்    வந்து இறங்கும்.விசேஷம் முடியும் வரையிலும் இருந்து சாப்பிட்டு விட்டு வண்டிக்கூலியும் வாங்கிக்கொண்டுதான் செல்வான். அழுக்கு சட்டையும் ,முழங்கால் வரை துக்கிக்கட்டிய லுங்கியும், எண்ணெய் காணாத தலையுமாக திரிந்து கொண்டிருப்பான்  மொஹல்லாவுக்குள். ' நவாஸ் சைக்கிள் கடை'க்குச்செல்வதைத் தவிர்த்து நேராக கைவண்டிப்பக்கம் சென்றான் அத்துமுனா. இவன் வருவதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட அஜீஸ் ,கையாட்டினான்.
                                                                                                                                ( தொடரும்.......)