புதன், 25 ஏப்ரல், 2012

கோவை இலக்கிய சந்திப்பின் 16 வது நிகழ்வு

கோவை இலக்கிய சந்திப்பின் 16 வது நிகழ்வு 25.3.12 ஞாயிறு அன்று 4 நாவல்கள் 7 கவிதைத் தொகுப்புகள் என 11 நூல்கள் விமர்சனம் காலை முதல் மாலை வரை இனிது நடைபெற்றது.அவைநாயகன் அவர்கள் நடுவராக இருந்து நிகழ்வுகளை நடத்தினார்.சிறப்பு விருந்தினர்களாக ஞானிஅய்யா, குளச்சல் மு.யூசுப்,கனடிய ஈழ எழுத்தாளர் அகில், புது எழுத்து மனோன்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். குளச்சல் யூசுப் அவர்கள் மலையாளத்திலிருந்து மொழி பெயர்த்த நான்கு மிக முக்கிய நாவல்களான மீசான் கற்கள்,மக்க்ஷர்பெருவெளி , அக்னிசாட்சி ,ஒரு அமர கதை ஆகிய நாவல்கள் குறித்து திரு.யுகமாயினி சித்தன் அவர்கள் மிகச் சிறப்பாக விமர்சித்து மதிப்புரை வழங்கினார். புனத்தில் குன்சப்துல்லா வின் இரண்டு நாவல்களின் கதைகளை சொல்லி கதை நிகழ்வுகளை கண்முன்னே கொண்டுவந்தார் சித்தன். ஸ்ரீ குமார் எழுதிய "ஒரு அமர கதை" புத்தகத்தையே இன்று தான் பார்க்கும் வாய்ப்பே கிடைத்தது.தந்த்ரா யோகம் பற்றி இந்திய அளவில் எழுதப்பட்ட முதல் நாவல் இது என்பது குறிப்பிடத்தக்கது.1997 ல் மொழி பெயர்க்கப்பட்ட நாவல் இது .மறுபதிப்பு வரவேயில்லை. முதல் பதிப்பே யாருக்கும் தெரித்த நிலையில் மறுபதிப்பு எங்கே வரும் ..? இந்த நாவல் குறித்து சித்தன் அவர்களின் மதிப்புரை உன்னதமான ஆய்வுக்கட்டுரையாக இருந்தது . "ஒரு அமர கதை'' என்ற இந்த நாவலை " காதை " பதிப்பகம் வெளியிட்டுள்ளது.மறுபதிப்பு யாரவது கொண்டுவரவேண்டும்.இந்த நான்கு நாவல்களை குறித்து பேசும் போது ,மலையாளத்தில் எழுதுவது போல பாலியலை இங்கே எந்தப்படைப்பா ளியும்,இவ்வளவு வெளிப்படையாக,மூடி மறைக்காமல் துணிச்சலுடன் எழுதவில்லை - எழுதுவதில்லை என்று சித்தன் அவர்கள் குறிப்பிட, திரு.பொதியவெற்பன் அவர்கள் தி.ஜா, தஞ்சை பிரகாஷ், எம்.வி.வெங்கட்ராம் போன்றோர் எழுதியுள்ளனர் என்றார்.தஞ்சையை தவிர வேறு பகுதி படைப்பாளிகள் எழுதவில்லை என்றார் சித்தன்."பொதுவுடைமை கட்சிகளின் தாக்கம் இது.கேரளாவை போலவே ,தஞ்சையில் தான் பொதுவுடைமை கட்சி ஆரம்பிக்கப்பட்டது-வளந்தது ...." என்று விளக்கம் சொன்னார் குளச்சல் யூசுப் அவர்கள்.குளச்சல் யூசுப் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்புரையாக நிறைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.இந்த நாவல்களை குறித்து ஞானி அய்யாவும் பொதுவாக சில கருத்துகளை பேசினார்.
திரு.அவை நாயகன் மதிப்புரை வழங்கிய கவிதை நூல் பட்டாம் பூச்சியை மட்டுமே கதா பாத்திரமாக கொண்ட "தேவதைகளின் மூதாய்". புதிய படைப்பாளியான ரவிராஜின் முதல் கவிதை நூல் இது. குழந்தை தன்மையுடன் வண்ணத்துப்பூச்சியை சிறு வயது முதல் ரசித்து வருவதாக குறிப்பிட்டார் இவர்.சின்ன சின்ன வரிகளில் அற்புத அனுபவமான அழகிய கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. காட்டை-இயற்கையை மிக நேசிக்கும் அவை நாயகன் இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கியது மிக பொருத்தமாக இருந்தது.
புது எழுத்து - வெளியிட்ட சபரிநாதனின் "களம் காலம் ஆட்டம் " கவிதை நூலை இளங்கோ கிருஷ்ணன் மிகச்சிறப்பான முறையில் விமர்சனம் செய்தார்.இலங்கையின் உன்னத கவிஞர் றியாஸ் குரானாவின் " நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு " கவிதைத்தொகுப்பிலிருந்து சில கவிதைகளை தியாகு வாசித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக